மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களில் முறைகேடு செய்பவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்! – டக்ளஸ்

பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்துள்ள இலவச சீருடைக்குப் பதிலாகத் தற்போதய அரசு வவுச்சர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முறைமையைப் பயன்படுத்தி வடக்கில் பல பாடசாலைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிய வருகிறது எனவே இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள் வவுனியா மாவட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் மேற்படி வவுச்சர்களை தம்வசம் வைத்துக்கொண்டு அவற்றை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்து வருவதாக தெரியவருகிறது. அதே நேரம், யாழ்ப்பாணத்தை அண்டிய பாடசாலையொன்றின் அதிபர் வவுச்சர்களை புடவை வியாபாரிகளுக்கு வழங்கி சீருடைத் துணிகள் கொள்வனவு செய்து பாடசாலையை புடவைக்கடையாக மாற்றியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

வடக்கில் மட்டுமல்ல, இவ்வாறான முறைகேடுகள் நாட்டில் எங்கு நடந்தாலும் அவற்றிற்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதே நேரம் இவ்வாறான முறைகேடுகள் ஏற்படாத வகையிலான திட்டம் வகுக்கப்பட் வேண்டியதும் அவசியமாகும்.

அத்துடன், சீருடை வவுச்சர்களைப் பெறுவதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கும் ஏற்பாடுகள் அவசியம் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts