மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகமும், கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொண்ட சமுர்த்தி புலமைப்பரிசில் பரீட்சை வழங்கும் நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இத்திட்டமானது வறுமைக்கோட்டிற்குள் வாழுகின்ற மாணவர்களின் கற்றலுக்கு பெரும் துணையாக அமையும் என்றும், கல்விக்கு தடையாக இருக்கின்ற சகல காரணிகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் கல்வியை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து இச் சமுர்த்தி திட்டத்தினை மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொண்டு அத்துறையிலே சாதிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு நாட்டிற்கு நல்ல சேவை வழங்கும் தலைவர்களாக உருவாக வேண்டுமென்றும் தெரிவித்தார்.