Ad Widget

மாணவர்களின் உணவை படையினர் கைகளால் சோதனையிடுகின்றனர் – பெற்றோர் கவலை

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.

மாணவர்கள் , ஆசிரியர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள். அதன் போது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் வெற்று கைகளால் மாணவர்களின் புத்தக பை முதல் உணவு பொட்டலம் வரை சோதனையிடுகின்றார்கள்.

அதனால் மாணவர்கள் தாம் கொண்டு செல்லும் உணவினை வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தாம் காலையில் பிள்ளைகளுக்கு உணவு சமைத்து கொடுத்து விட அவர்கள் அதனை உட்கொள்ள முடியாது வீசி விட்டு பசியோடு கல்வியை தொடரும் நிலமை காணப்படுவதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

அது தொடர்பில் உரியவர்கள் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வினை பெற்று தருமாறு பெற்றோர் கோருகின்றனர்.

Related Posts