வடக்கில் நிகழுகின்ற குற்றச்செயல்களுக்குத் திரைப்படங்களே காரணம் என்று சட்டம் ஒழுங்குக்குப்
பொறுப்பான மத்திய அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்தபோது தெரிவித்திருக்கிறார். இதில் எந்த
அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் எமது மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களது
ஆதர்ச நாயகர்களாகத் திரைப்பட நடிகர்களை வரித்துக்கொண்டு அவர்களது நடை, உடை, பாவனையைப் பின்பற்றி வருகிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலைமாறி மாணவர்களின் ஆதர்ச புருசர்களாக ஆசிரியர்களே திகழ வேண்டும். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ஆதங்கத்தோடு
தெரிவித்துள்ளார்.
பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து கொக்குவில்
சி.சி.த.க பாடசாலைக்கு ஒளிப்படப்பிரதி இயந்திரம் ஒன்றைக் கையளிக்கும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை (24.07.2018) அந்தப் பாடசாலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
பண்பாட்டுப் பிறழ்வான செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவது
அண்மைக்காலமாகத் தொடர்கதையாக உள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்தையும் பாதிக்கின்றது. எல்லாப் பணிகளையும்விட ஆசிரியப்பணியே மகத்துவமானது. இந்த உன்னதமான சேவையின் புனிதம் காப்பாற்றுப்படுவதிலேயே எமது சமூகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.
ஆசிரியர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகின்ற மாணவர்கள் பச்சைக்களிமண் போன்றவர்கள் இவர்கள் எந்த
உருவத்தில் வனையப்படப் போகின்றார்கள் என்பது தங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை ஆசிரியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வெறுமனே ஏட்டுக்கல்வியை போதிப்பவராக மாத்திரமல்லாமல் சகல விடயங்களிலும் மாணவர்கள் தங்களை பின்பற்றக் கூடிய முன்னுதாரண புருசர்களாகவும் ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும்.
கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களை நல்ல நடிகர்கள் என்று சொல்லுவார்கள். இவர்கள் மாணவர்களின்
மனஇறுக்கத்தைத் தளர்த்தி அவர்களை ஆர்வத்தோடு பாடங்களை உள்வாங்கச் செய்யும் விதத்தில் கற்பிக்கும்போது தேர்ந்த நடிகர்களாக ஆகிவிடுவார்கள். குரல்மொழியில் ஏற்றஇறக்கங்களைக் காண்பித்தும்,உடல்மொழியில் பாவனைகளைக் காண்பித்தும் மாணவர்களை உற்சாகமாக கற்கும் சூழலுக்கு தயார்செய்து போதிப்பதில் வெற்றிபெறுகிறார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தில் ஆசிரியர்கள் வெறுமனே கற்பித்தலில் மாத்திரம்
நின்றுவிடாது பெற்றோர்களாக அவதாரம் எடுக்கவேண்டிய தேவையும் உள்ளது. பாடசாலைக்கு இன்றுவரும்
மாணவர்களில் அநேகர் பெற்றோர்கள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். கூலிவேலைக்குச் செல்லும்
பெற்றோராலும் தங்களது பிள்ளைகளுடன் போதிய நேரத்தைச் செலவிட முடியாமல் உள்ளது. இந்நிலையில்,
மாணவர்கள் பெருமளவு நேரத்தைப் பாடசாலையிலேயே செலவிடுவதால் அவர்களை அன்பாக அரவணைத்து
ஆற்றுப்படுத்துகின்ற இரண்டாவது பெற்றோர்களாகவும் எமது ஆசிரியர்கள் இயங்கவேண்டும்.
ஆசியர்கள் மாணவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில்
கட்டுப்பாடற்ற தகவல்தொழில்நுட்ப வசதிகளால் எமது மாணவர்கள் தமது வயதுக்குமீறிய உலகத்துக்குள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதன் சரிபிழைகளைத் தீர்மானிக்கமுடியாத நிலையில் மாணவர்கள் தவறான வழித்தடத்தில் பயணிக்க நேரிடுகிறது. இந்நிலையில்இ மாணவர்களுடன் மனம்விட்டுப்பேசி அவர்களுக்கு நன்மைதீமைகளை எடுத்துச்சொல்லும் நண்பர்களாகவும் ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும்.
எமது ஆசிரியர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் ஏராளமான
பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தவாறே பாடசாலைக்கு வருகிறார்கள். ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் அரசாங்கம் முன்னுரிமைகொடுத்துச் செயற்படவேண்டும். அப்போதுதான் எமது
ஆசிரியர்களால் முழுமனதோடு ஆசிரியப்பணியை முன்னெடுக்கவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.