மாகாண சபை மக்களை ஏமாற்றக்கூடாது – சிற்றம்பலம்

வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை பெறுகின்றோம் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

sittampalam

தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட கிளையின் மாநாடு நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லையென நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது. அது மத்திய அரசுக்கு உரித்தான உரிமை. ஆகவே காணி, பொலிஸ் அதிகாரங்களை பெறுகின்றோம் என மக்களை வடமாகாண சபை ஏமாற்ற வேண்டாம்’ என்றார்.

‘தென்னிலங்கை கட்சிகளுடன் இணைந்து தீர்வுத்திட்டம் தொடர்பில் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் நினைக்கின்றார்கள். நாங்கள் பிரிவினையை கோருகின்றோம். வடக்கு – கிழக்கு இணைப்பை தனிநாடு கேட்கின்றார்கள் என சிங்கள மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது. ஆனால் நாங்கள் கேட்பது தனிநாடு அல்ல. அதிகார பகிர்வே.

அதிகார பகிர்வானது முழு இலங்கையில் இடம்பெற வேண்டும் என நாங்கள் கேட்கின்றோம். மலையக முஸ்லிம் மக்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுக்கவேண்டியுள்ளது. தாயாகத்தை பாதுகாக்க இஸ்லாமிய தலைமைகளுடன் சேர்ந்து தீர்வு திட்டத்தை தயாரிக்கவுள்ளோம்.

மாகாணத்தில் சுயாட்சியும் மத்தியில் அதிகார பகிர்வும் எமக்கு கிடைக்க வேண்டும். தமிழர்களின் போராட்டம் ஆயுதப்போராட்டம், பயங்கரவாத போராட்டம் என சொன்ன சர்வதேசத்துக்கு, நாம் எமது பிரச்சினையை தெளிவாக சொல்ல வேண்டும்.

1961ஆம் ஆண்டு நாம் சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். அதன்மூலம் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். அந்த போராட்டத்தை தடுக்க பொலிஸ் மட்டுமே இருந்தது. இன்று அந்த நிலைமை இல்லை. இராணுவ புலனாய்வாளர்கள் போராட்டங்களை தடுக்க முயல்கின்றார்கள்.

எனவே இதுபற்றி சிந்திக்க முதல் பரந்துபட்ட கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts