மாகாண சபை தேர்தலை நடத்தாமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே காரணம் – தவராசா

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாண சபை தொடர்பில் பேசுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து வழங்குங்கள் தொடர்ந்தும் அவற்றை வெறுமனையாகவே வைத்திருக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்தித்த போது அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவ்வாறான கோரிக்கைகளை மகிந்தவிடம் வலியுறுத்த முன்பு தங்களை கண்ணாடியில் முன்னால் நின்று பார்த்து விட்டு இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். அவ்வாறு தங்கள் முகங்களை கண்ணாடியில் பார்த்த பின்னர் கோரிக்கைகளை முன்வைப்பதே வலுவானதாக இருக்கும்.

ஏனெனில் இன்று மாகாண சபைகள் எவையும் மக்கள் பிரதிநிதிகளினால் ஆட்சி செய்யப்படாமல் ஆளுநர்களின் ஆட்சியில் உள்ளது.இதற்கான முழுப்பொறுப்பினையும் கடந்த நல்லாட்சி அரசும் அதற்கு முட்டுக்கொடுத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே காரணம் அதற்கான பொறுப்பினை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

மாகாண சபை சட்டத்தின் பிரகாரம் ஒரு மாகாண சபை களைந்து இரண்டு மாதத்திற்குள் புதிய மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சி அரசு கொண்டுவந்தது. இத் தேர்தல் சட்ட திருத்த மூலத்திற்கு அமைவாக புதிய தேர்தல் முறையானது 50 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவத்தையும் 50 வீதம் தொகுதிவாரியான பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கும்.அச் சட்ட திருத்தத்திற்கு அமைவாக தொகுதிகளை பிரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு அக்குழுவுக்கு விதிக்கப்பட்ட கால வரையறைக்குள் தனது அறிக்கையை கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி உள்ளுராட்சி அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்கெடுப்பின்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாததன் காரணமாக தோல்வியடைந்தது. அத்திருத்த சட்ட விதிகளுக்கு அமைய அவ்வாறு தோல்வியடைந்தால் பிரதமர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.அதன் அடிப்படையில் அப்போதைய பிரதமர் ரணில் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தேர்தல் சட்ட மூலத்திற்கு அமைய பிரதமர் தலைமையிலான மீளாய்வுக் குழு தனது மீளாய்வு அறிக்கையை இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்போதைய பிரதமர் ரணில் மீளாய்வுக் குழுவினை பாராளுமன்றம் கலையும் வரை முறைப்படி கூட்டவும் இல்லை. அறிக்கை சமர்ப்பிக்கவும் இல்லை.இதுவே மாகாண சபை தேர்தல் நடைபெறாமல் போனமைக்கு முக்கிய காரணம்.

மாகாண சபை அதிகாரம் வேண்டும் என முதலைக்கண்ணீர் வடிப்படவர்கள் இருக்கின்ற அதிகாரங்களை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சிகளும் எடுக்காது மௌனிகளாக இருந்தனர். கடந்த கால அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்துவிட்டு இப்போது கூக்குரல் போடுவதில் அர்த்தம் இல்லை. ஜனநாயகம் சட்ட ஆட்சி என்பன நாட்டில் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என ஓலம் இடுபவர்கள் எதற்காக இரண்டு மதத்திற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சட்ட ஏற்பாடு இருந்தும் அப்போய்ஜைய பிரதமர் ரணில். அப்பட்டமாக மீறியமைக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Related Posts