வடக்கு மாகாண சபையை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு மாதாந்தம் உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுடன் கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக வடமாகாண சபை வினைத்திறன் அற்றதாக செயற்பட்டு வருகின்றது, அத்துடன், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்றன.
அந்தவகையில், எதிர்காலத்தில் மாகாண சபையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், மாகாண சபை உறுப்பினர்களிடையே காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்களின் தேவைகளை என்ன வகையில் தீர்க்கலாம் என்றும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், குறித்த முரண்பாடுகள் மற்றும் மாகாண சபையினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு மாதாந்தம் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தீர்மானங்களை எடுப்பதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சியின் தலைவர்களுடனும் கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்பதென்றும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.