மாகாண சபையின் அதிகாரம் ஆளுநருக்கா? முதல்வருக்கா? -சுரேஸ் கேள்வி!

“மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் என்பது ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மத்திக்கு என்ன அதிகாரங்கள், மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு: யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும்கூட இந்த வரவு – செலவுத்திட்டமென்பது பாதுகாப்புத்துறைக்கு அல்லது முப்படைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்டமாகவே உள்ளது.

கடந்த வருடம் 244 பில்லியனாகவிருந்த பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடானது 4.9 பில்லியன் அதிகரிக்கப்பட்டு 253.4 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2014 ஆம் ஆண்டிற்கான 1542 பில்லியனில் ஏறத்தாழ 16.5 வீதமாகும். போரால் பாதிக்கப்பட்டோருக்கு பட்ஜட்டில் ஒதுக்கீடு இல்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள். இங்கு இலட்சக் கணக்கில் வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். 12ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். கால் இல்லாமல், கை இல்லாமல், கண் இல்லாமல், நடமாட முடியாமல் ஊனமுற்றோர் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கடந்த 4 வருட வரவு – செலவுத் திட்டத்தில் இவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டதா என்றால் இல்லை என்பதே அதற்கான பதில்.

ஜெயபாலன் கைதும் நல்லிணக்க இலட்சணமும்
இரு நாட்களுக்கு முன்பு ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் வ.ஜ.ச. ஜெபாலன் மாங்குளத்தில் அமைந்திருக்கும் தனது தாயாரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தார். ஆனால் அவரைப் பின்தொடர்ந்த புலனாய்வுப் பிரிவினர் சுற்றுலா விசாவில் வந்தவர் வேறு கடமைகளில் ஈடுபட்டார் என்ற காரணத்தைக் கூறி அவரைக் கைது செய்துள்ளனனர். இந்த இலட்சணத்தில்தான் தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான புரிந்துணர்வைப்பற்றி ஜனாதிபதியும் அமைச்சர்களும் கர்ச்சிக்கின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரத்தியேகமான திட்டங்கள் உருவாக்கி அவர்களையும் கையுயர்த்தி விடுவதற்கான எந்தத் திட்டமும் இல்லாத அரசு மாறாகத் தமிழ் மக்களையும், தமிழ் மண்ணையும் முழுமையாகக் கொள்ளையடிப்பதையே தமது நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

தங்கக் கொள்ளையில் மக்கள் வங்கி?
அரச வங்கியான மக்கள் வங்கிக் கிளைகளில் அடகு வைப்பது வழமை. மக்களும் அவ்வங்கிமேல் கொண்ட நம்பிக்கை காரணமாகப் பலநூறு பவுண் தங்கத்தை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் வங்கிக் கிளைகளில் அடகுவைத்து பணத்தைப் பெற்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் யுத்தத்தில் தமது உடைமைகளை இழந்துபோனதால் இவற்றுக்கான பற்றுச்சீட்டுகளையும் இழந்துவிட்டனர்.

இதனால் தமது நகைகளை மீட்க முடியாமல் உள்ளனர். இந்த நகை உரிமையாளரின் பெயர்ப்பட்டியல் மற்றும் விவரங்கள் வங்கிவசம் இருந்தும்கூட கடந்த 4 வருடங்களாக அந்த மக்களின் நகைகளை மீள ஒப்படைக்க வங்கி எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்திற்குரியது. வங்கியானது நகைகளை அடகுவைத்தோரின் பெயர் விவரங்களைப் பத்திரிகை வாயிலாக வெளியிடவேண்டும். அவர்களது பெயர் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களின் நகைகளை ஒப்படைக்க முன்வரவேண்டும். இல்லையேல் மக்கள் வங்கியும் யுத்தத்தைச் சாதகமாகப் பாவித்து தமிழ் மக்களின் தங்கத்தைக் கொள்ளையடித்த வங்கியாகவே கருதப்படும். வடக்கு ஆளுநர் மாற்றம் தேவை வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று அங்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியையும் அமைத்துள்ளது. ஆனால், அங்குள்ள ஆளுநர் மாற்றப்படவேண்டும், தலைமைச் செயலாளர் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும்கூட இன்னும் இவர்கள் மாற்றப்படவில்லை. ஆளும் கட்சியின் கொள்கை விளக்க உரையை வாசிக்க மறுத்த வடமாகாண ஆளுநர் தனது கொள்கை விளக்க உரையை வாசித்துவிட்டுச் சென்றுள்ளார். பதின்மூன்றாவது திருத்தத்தின் பிரகாரம் மத்திய அரசுக்கு என்ன அதிகாரங்கள், மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானிக்கும் தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

அதிகாரம் ஆளுநருக்கா? அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. மாகாண அதிகாரிகள் மாத்திரமல்லாமல் மத்திய அரசுக்கும் மாகாணத்திற்கும் பணிபுரியும் அதிகாரிகள் மாகாண சபையின் கட்டளைகளை நிறைவேற்றுவார்களா? இல்லையா என்பதைத் தீர்மானிக்கவேண்டிய தருணமிது. தமிழருக்கு நீதி வழங்க நீதித்துறை முன்வருமா? அரசியல் சாசனத்தில் உள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்குமா, இல்லையா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய நேரமிது. நீதித் துறை சுதந்திரமாகச் செயற்பட்டு தமிழ் மக்களுக்குரித்தான நீதியை நிலைநாட்டப் போகின்றதா? அல்லது அரசின் கைப்பொம்மையாகச் செயற்பட்டு அரசியல் சாசனத்தையே புதைக்கப் போகின்றதா என்பதையும் அறியும் நேரமிது.

இலங்கை – இந்திய ஒப்பந்தமும் தமிழர்களின் அபிவிருத்தியும் மக்கள் தங்களது அரசியல் சமூக பொருளாதார அபிவிருத்திகளைத் தாங்களே செய்யவேண்டும் என்பதற்காகவும் குறிப்பாகத் தமிழ் மக்கள் தங்கள் அபிவிருத்திப் பணிகளைத் தாங்களே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவுமே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினூடாக மாகாண சபைகள் என்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டது.

ஆனால் அதிகாரங்கள் அற்ற இச்சபையானது அபிவிருத்திக்கு அரசிடமிருந்தே எதிர்பார்த்துக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலையில் உள்ளது. தமக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வரிவிலக்கவும், முதலீகளைக் கொண்டுவரவும் அதிகாரங்கள் இருக்கும் பட்சத்திலேயே மாகாண சபைகள் தமது சொந்தக் காலில் நிற்க முடியும். எனவே, அவ்வாறான அதிகாரங்களோ அல்லது காணி, சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல் போன்ற அதிகாரங்களோ இல்லாத பட்சத்தில் மாகாணசபையின் நடவடிக்கைகள் என்பது மந்தமாகவே இருக்கும்.

அதிகாரங்கள் பிச்சையல்ல மாகாணசபைக்கு கொடுக்கும் அதிகாரங்கள் என்பது ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. அரசியல் சாசனத்தில் உள்ளவற்றை நிறைவேற்றும்படியே நாம் கோருகின்றோம். இதனை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துமேயானால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இல்லாத பட்சத்தில் இலங்கை அரசு பிரசாரப்படுத்தும் நல்லிணக்கம் என்பதெல்லாம் போலிச் சொற்றொடராகவே இருக்கும் என்றார்.

Related Posts