அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் முதலமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் ஊடாக செய்ய எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து முதலமைச்சர்களுக்கு விளக்கமளித்த பிரதமர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது. தேசிய அபிவிருத்திக்காக மாகாண சபைகளை வினைத்திறன் மிக்கதாக பங்கேற்கச் செய்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கபடுகின்றது என்றார்.
மேலும், மாகாண சபைகளுக்கு உரித்தான எந்த விடயங்களும் இந்த சட்டமூலத்தினூடாக நடைபெறாது. இந்த யோசனைக்கு ஏற்றவாறான திருத்தங்களை நாடாளுமன்ற குழுநிலையில் முன்வைக்க சந்தர்ப்பம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற குறித்த முக்கிய சந்திப்பில் தென், மேல், கிழக்கு, ஊவா மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்றிருந்த அதேவேளை, இந்த சந்திப்பு குறித்து தனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படாத நிலையில், இதில் பங்கேற்கப்போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.