மாகாணசபை தேர்தல் தொடர்பில் நான் சிந்திக்கவில்லை: வடக்கு முதல்வர்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நான் ஏற்கனவே எனது கருத்துக்களை வெளியிட்டு விட்டேன். ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய, தமது மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று கோரியுள்ளேன்.

உள்ளுராட்சியில் கட்சிகள் புகுந்ததால் இதுகாறும் எமது உள்ளுராட்சி மன்றங்கள் பலவிதமான சிக்கல்களை எதிர் நோக்கி வந்துள்ளன. இதே போன்றுதான் முன்னர் அரசியல்வாதிகளும் அரசியலும் புகுந்து எமது கூட்டுறவு சங்கங்களை சின்னாபின்னமாக்கி வைத்தன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

அத்துடன் அக்கொள்கையானது 2013ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒத்தது என்றும் கூறியுள்ளேன். தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடையவர்களை நான் மதிக்கின்றேன் என்றும் அந்த குறிப்பிட்டுள்ளார்.

Related Posts