மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் உதய சூரியனில் போட்டி!

வட. மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும், இ.கௌதமனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

” தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்டியிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்வரும் செப்டெம்பர் மாதம் மாகாணசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் ஒரு பக்கமும் மாவை சேனாதிராஜா இன்னொரு பக்கமுமாக போட்டியிடுவார்கள். இதில் நிச்சயமாக மாவை சேனாதிராஜா வெல்லப்போவதில்லை. மீண்டும் தற்போதைய முதலமைச்சரே வெற்றிபெறுவார். மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் தனித்து நிற்கப்போவதில்லை. பொதுச் சின்னத்திலோ சைக்கிள் சின்னத்திலோ போட்டியிடப்போவதில்லை. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்துடன் பேசி செய்யக் கூடிய சிறிய விடயங்களை கூட எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் செய்யவில்லை என்றும் அமிர்தலிங்கம் போன்ற ஒரு எதிர்க்கட்சி தலைவர் தமிழர் மத்தியில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கை கேட்டு இரண்டரை வருடங்களாக அற்ப சலுகைகளுக்காக பின்னால் நிற்கிறார்கள் கூட்டமைப்பினர் எனவே மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts