மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

mahintha

இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதி வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.

அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த முடியாது என்றாலும், அவர் நிதியமைச்சராகவும் செயற்படுவதால், நிதியமைச்சர் என்ற வகையில் அவரையும் வழக்கில் சேர்க்க முடியும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

கோல்டன் கீ நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்ததனால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தின் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவி துஷாந்தி ஹபுகொட தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு கோல்டன் கீ நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி மோசடி காரணமாக அங்கு பணத்தை வைப்புச் செய்த சுமார் 9000 க்கும் அதிகமானோருக்கு 2600 கோடி ரூபாவுக்கு அதிகமான பண இழப்பு ஏற்பட்டதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அந்த வழக்கில் ஜனாதிபதியையும் பிரதிவாதியாக சேர்த்திருப்பது, அரசியல்யாப்பின் 35 வது பிரிவின் கீழ் தவறு என்று எதிர்தரப்பு சட்டத்தரணி வாதிட்டார். ஆகவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.

ஆனால், அந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, அரசியல்யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்ற போதிலும், அவர் நிதியமைச்சராகவும் பணிபுரிவதால், நிதியமைச்சர் என்ற வகையில் அவருக்கு எதிராக வழக்கை விசாரிக்க முடியும் என்று கூறினார்.

Related Posts