முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என கருத்துக்கள் நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்தாகும். இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து தமிழர்களை காப்பாற்றவே அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயுதப் போராட்டங்களின் போது ஒரு சில குற்றங்கள் நடத்தப்பட்டிருக்கலாம், அதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களோடு விடுதலைப் புலிகளையும் இணைத்து பார்க்க கூடாது.
இன்று இலங்கையில் ஜனாதிபதி பதவியில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன கூட போர்க் குற்றவாளிதான், மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, கடைசி 2 வாரங்களில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தவர் தான் இந்த மைத்திரிபால சிறிசேன.
இவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாது, இலங்கையில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலின் போது நடத்தப்பட்ட பிரச்சார மேடைகளில் சிங்களவர் மத்தியில் உரையாற்றிய சிறிசேன, தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் அதிகளவான விடுதலைப் புலிகள் கொலை செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார். எனவே சிறிசேனவும் போர்க் குற்றவாளிதான் எனக் கூறினார்.