“தமிழர்களைக் கொன்று குவித்து – அவர்களின் வாழ்விடங்களைத் தரைமட்டமாக்கி யுத்தவெற்றி என்று உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும் மஹிந்த அரசு பறைசாற்றியது. அப்போது வாயை மூடிக்கொண்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் இன்று வடக்கு, கிழக்கில் வெற்றிலை சின்னத்திலும், வீணை சின்னத்திலும் வாக்குக் கேட்டுவருகின்றார்கள்.இவர்களை தமிழ் மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
“எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கைத் தமிழரசுக் கட்சியின்) வீடு சின்னத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களும் வாக்களிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கிலிருந்து மஹிந்தவின் பட்டாளத்தை விரட்டியடிக்கமுடியும்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளோம். அதில் எமது மக்களின் பிரச்சினைகள் பற்றி தெளிவாகக் கூறியிருக்கின்றோம். எமது மக்களின் இறைமையின் அடிப்படையில் நாங்கள் ஒரு தனித்துவமான இனம். எங்களுக்கு தனித்துவமான மொழி, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்கள் உள்ளன. தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். அந்தப் பிரதேசங்களில் போதியளவு சுயாட்சியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை மக்கள் பெறவேண்டும்.
தங்களுடைய சமூக, பொருளாதார, கலாசார அபிலாஷைகளைத் தாங்களே நிறைவேற்றக்கூடிய வகையில் அவர்களுக்கான அரசியல் தீர்வு அமையவேண்டும்” – என்றார்.