மஹிந்த சிந்தனை’ என்ற அரசியல் நோக்கத்துக்காக செயற்பட முடியாது: முதலமைச்சர்

ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் என்பது முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டமாகும். இதை விடுத்து மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக வட மாகாண ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது’ என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

cv_vigneswaran_vavunia

‘வட மாகாண சபையில் நாம் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன’ என்றும் வட மாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும்’ அவர் கூறியுள்ளார்.

வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்டு, முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஆளுநர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வட மாகாண சபையினால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் நாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றோம். அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்’ என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

‘யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் என்னையும் ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.

அதற்கான கடிதம் ஒன்று எனக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைத்திருக்கின்றது. இருப்பினும் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

Related Posts