பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சூட்சுமமாக முன்னெடுத்து வருகிறார் என அறியமுடிகின்றது.
இதன்படி, மஹிந்த அணியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை அரசு பக்கம் வளைத்துப் போடுவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் முதற்கட்ட நகர்வாக ஆறு பேருக்கு குறிவைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவு வழங்குவதற்கு அவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.
அந்தவகையில், பவித்ரா வன்னியாராச்சி, லக்ஷ்மன் செனவிரத்ன, மனுஷ நாணயக்கார உட்பட மஹிந்த அணியிலுள்ள ஆறுபேர் எதிர்வரும் 9ஆம் திகதி அரசுக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என்றும், அவர்களுக்கு அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
பவித்ரா வன்னியாராச்சி, மனுஷ நாணயக்கார ஆகிய மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் இருவரும் பட்ஜட் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. லக்ஷ்மன் செனவிரத்ன பட்ஜெட்டுக்கு சார்பாக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்குத் தாம் கடும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதை பலவீனப்படுத்துவதற்குரிய முயற்சியில் அரசு தரப்பு இறங்கியுள்ளதால், மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் நாளை 29ஆம் திகதி அவசரமாகக் கூடவுள்ளனர்.
இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன. குறிப்பாக, அரசுக்கு ஆதரவு வழங்கவுள்ள உறுப்பினர்கள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், அரசமைப்பு மாற்றம், உள்ளூராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு பேசப்படவுள்ளது.