எங்கோ இருந்த இலங்கையை கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொழிலாளர்களின் நலன்களில் அதிக அக்கறைகொண்டு செயற்பட்டு வருவதாக யாழ். மாவட்டத்தின் தொழிற்சங்கத்தின் உச்சி மாநாடு யாழ், வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது, சாதாரண மக்களையும் அபிவிருத்தி சென்றடைந்துள்ளது. எங்களுடைய பிரதேச மக்கள் ஜனாதிபதி செய்த அபிவிருத்திகளை சாதாரணமாக விடக்கூடாது.
வடமாகாண மக்கள் வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வார். அவருக்கு தென்பகுதி மக்களின் வாக்குகளே போதும். ஆனால், ஒருவர் எமக்கு நல்ல விடயங்களை செய்யும் போது அவர்களை தட்டிக்கொடுப்பதோடு நன்றியும் தெரிவிக்கவும் வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிய, சாதாரண மனிதர்களின் கட்சி. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
எல்லோருக்கும் இந்தக் கட்சியால் நலன் கிடைக்கும். 12 மணிநேரம் கொழும்பு பயணம் தற்போது 6 மணித்தியாலமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் ரயில் சேவை ஆகும். எனது வயதை சேர்ந்தவர்களுக்கு புகையிரதம் தெரியாது. ஆனால், இன்று எமக்கு இந்த சேவை கிடைத்துள்ளது’ என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் வெஸ்லி தெய்வேந்திரா, இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதேச செயலாளர் றஞ்சித் செட்டியாராச்சி, பெற்றோலிய கூட்டுத்தாபன உதவிச்செயலாளர் பந்துல சமான் குமார, மற்றும் தொழிச்சங்க உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.