நேற்றய ஜெனிவா கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பலர் பங்குபற்றி இலங்கை தொடர்பில் தத்தம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
சுவீடன் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் பீற்றர் சாக் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் போராளியும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், கடந்த தேர்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளருமான சின்னமணி கோகிலவாணி தனது கருத்தினைத் தெரிவிக்கையில்,
அன்றைய மஹிந்த அரசுக்கும் இன்றைய மைத்திரி ரணில் அரசுக்கும் எதுவிதமான வேறுபாடுமில்லை. ஆனால் அன்றைய அரசு வெளிப்படையாக அனைத்து அட்டூழியங்களையும் செய்தது.
இன்றைய அரசோ இரகசியமாக அனைத்தையும் செய்து வருகின்றது. இன்றைய காலகட்டத்திலும் தமிழ் மக்களுக்கென எந்தவிதமான சாதகமான செயற்பாடுகளையும் அரசு செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.