நீங்கள் எப்பொழுதும் இனவாதத்தையே பேசிக்கொண்டிருக்காமல் எமக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள் என இராஜாங்க அமைச்சரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் எதிரணியினரை கடுந்தொனியில் எச்சரித்துள்ளார்.
இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் நாடாளுமன்றில் பேசியபோது, எதிரணியைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், ”பொய்யாக கூச்சலிடாதீர்கள். நாம் இன்றும் பல கஷ்டங்களை சுமந்து கொண்டு இருக்கின்றோம். எம்மையும் பேசுவதற்கு அனுமதியுங்கள்” என்று ஆவேசமாக கடுந்தொனியில் சிங்கள மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
எதிரணியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளரான தினேஸ் குணவர்தன உள்ளிட்ட சிலரே இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.