“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான துமிந்த நாகடுவ.
நேற்றுப் புதன்கிழமை யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை அவர் சந்தித்த சமயமே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியில் சேரப் போவதில்லை. இதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேரப் போவதில்லை.
இந்த விடயம் மாத்திரம்தான் நடக்காது. ஏனைய எவையும் எந்நேரத்திலும் நடக்கலாம். இன்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவோ, விவசாயிகள் -பாட்டாளி மக்கள் சார்பாகவோ யாரும் பேசத் தயாரில்லாத நிலைமையே காணப்படுகிறது.
இந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் என அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பொது எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன இது வரை எந்தக் கூட்டத்திலும் கூறவில்லை. இது மட்டுமல்லாது மைத்திரிபால சிறிசேன தான் அரசாங்கத்தின் தவறுகள், பிழைகள் காரணமாகத்தான் விலகினேன் என்றுகூட எந்த இடத்திலும் கூறவில்லை என்பதே உண்மை.
இவர்கள் அதிகாரங்களுக்காகவும் – வசதி வாய்ப்புகளுக்காகவும் – பணத்திற்க்காகவும் கட்சி மாறினார்களே தவிர மக்களின் நலன் கருதி அல்ல. – என்றார்.