நல்லாட்சி அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரப்போகின்றோமா என்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகரசபை வேட்பாளர்களுடனான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, “கடந்த 2015 ஆம்ஆண்டு கொடிய ஆட்சி ஒன்றை இறக்கியே நல்லாட்சி கொண்டுவரப்பட்டது. இந்த ஆட்சியை மாற்றிக் காட்டுவோம் என சிலர் சூளுரைக்கின்றனர். அத்தகைய நிலை ஏற்படின் மீண்டும் யார் ஆட்சிக்கு வருவர் என்பதை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்களுடைய பிரச்சினைகளை தீவிரமாக கையாளவில்லை என்றும் கூறுகின்றனர்.அது தவறு. நாம் அரசாங்கத்தின் பங்காளிகலல்ல. அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை. ஏற்கவும் மாட்டோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை எதனையும் ஏற்கமாட்டோம்.
எங்கள் மக்களுடைய கைகளில் எப்போதும் இருக்கின்ற பலம்வாய்ந்த ஆயுதம் வாக்குகள். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை நாட்டிலுள்ளவர்களும் சர்வதேச சமூகத்தினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உன்னிப்பாக அவதானித்துக் கொண்டும் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.