ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று (10) திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது.
மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் போட்டியிட முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்க உள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து ஆராய்ந்துள்ளனர். திங்கட்கிழமை பிற்பகல் 2.30 அளவில் நீதியரசர்கள் மீண்டும் கூடி இந்த விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.
நீதியரசர்களுக்கு இடையில் நடைபெறும் கூட்டத்தைத் தொடர்ந்தே ஜனாதிபதிக்கு சட்ட விளக்கம் பற்றிய அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக, ஈவா வனசுந்தர, பிரியசாப் டொஸ், ரோஹினி மாரசிங்க, புவனக அலுவிஹார, சிசிர ஆப்ரூ, சரத் டி ஆப்ரூ, பிரியந்த தசநாயக்க ஆகியோர் பிரதம நீதியரசருடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளனர்.
ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் விருப்பமானவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்ற உயர் நீதிமன்றின் அறிவிப்பிற்கு அமைய 40 பேர் தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.