இந்த நாட்டை ஆள மீண்டும் மஹிந்தவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:-
நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெற்றிகொண்ட ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்க்கமான தோல்வியைச் சந்தித்தார். எனினும், ஜனாதிபதி வேட்புமனு வாய்ப்பை வழங்கினார். அதற்கும் நாங்கள் எதிர்ப்பை வெளியிட்டோம். நாட்டுக்கு உயிர்கொடுப்போம் புதிதாக ஆரம்பிப்போம் என்கிறார் மஹிந்த.
2005ஆம் ஆண்டிலிருந்து 10 வருடங்களாக நாட்டை ஆண்ட அவர். ஒருசில மாதங்களின் பின்னர் தற்போது நாட்டுக்கு உயிர் கொடுக்கப்போவதாகக் கூறுகிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நாட்டை அவர்கள் கொலை செய்து முடிந்தாயிற்று.
கடந்த காலங்களில் நாட்டின் ஜனநாயகத்தை இல்லாது செய்து – ஊடகவியலாளர்களைக் கொலை செய்து குறிப்பாக, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி நீதியையும் இல்லாமல் செய்ததை நாம் அறிவோம்.
இவ்வாறு மோசமான வரலாற்றைக்கொண்ட ஒருவர் தற்போது நாம் மீண்டும் ஆரம்பிப்போம் எனக் கூறுகின்றார். ஆகவே, நாம் உறுதியாகக் கூறுகின்றோம் மீண்டும் மஹிந்தவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது – என்றார்.