மஹிந்தவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதே இல்லையாம்!

“ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுகின்றனர் என்றும், அவர்கள் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை என்றும், யுத்தத்தை வெற்றி கொண்ட சிப்பாய்கள் கீழ் மட்ட வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் கருத்துகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.” – இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

ruwan-vanika-sooreyaa

கொழும்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக இராணுவத்தினர் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கின்றனர் எனவும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். அவ்வாறு இருப்பின் முறைப்பாடு செய்திருக்க வேண்டும். எனினும், இதுவரையில் அவ்வாறான எந்த முறைப்பாடுகளும் பொலிஸாரிடம் பதிவாகியிருக்கவில்லை. பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் உதவிகள் கேட்கும் பட்சத்தில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர்.

தேர்தலை முன்னிட்டு இராணுவத்தினரால் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இராணுவப் பிரிவால் தேர்தலை இலக்காகக் கொண்டு எந்தவித துண்டுப்பிரசுரமும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக, ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட துண்டுப்பிரசுரமானது இராணுவத்தினரால் மாதாந்தம் வெளியிடப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பானதே. ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் இந்தத் துண்டுப்பிரசுரத்தில் இம்முறை பொறியியல் சேவைப் படையினரின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. எனினும், அதில் எந்தவித அரசியல் பிரதிநிதியின் படமோ அல்லது தேர்தல் கொள்கை பரப்பு கருத்துகளோ இடம்பெற்றிருக்கவில்லை.

இராணுவத்தினர் தமது கடமையை மறந்து செயற்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதிலும் எந்தவித உண்மைகளும் இல்லை. இராணுவத்தினர் என்ற வகையில் மிகவும் சிறப்பாக எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இராணுவத்தினர் தமது கடமையை ஒருபோதும் தட்டிக்கழிப்பதில்லை. நாட்டின் பாதுகாப்புக் குறித்து எந்நேரமும் விழிப்பாகவே உள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் புதன்கிழமைகளில் அலரி மாளிகையில் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

இது ஜனாதிபதி தலைமையில் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. இதேபோன்று பாதுகாப்புப் பிரிவிலும் செவ்வாய்க்கிழமைகளில் வழமையாக உயர்மட்டத்தினருடனான கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. இவற்றின் மூலம் நாட்டின் பாதுகாப்புக் குறித்து நாங்கள் வினைத்திறனாக செயற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த சிப்பாய்களை கீழ் மட்ட வேலைகளில் ஈடுபடுத்துவதாக விவரிக்கும் வகையில் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில் தெரிவிக்கப்படுவது பொய்யான தகவலாகும். அந்த விளம்பரத்தில் வருவது ஒரு நடிகர் மாத்திரமே. அவர் தெரிவிப்பது போன்று யுத்தத்தில் ஈடுபட்ட சிப்பாய்கள் எவரும் அவ்வாறு கீழ் மட்ட வேலைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. இராணுவத்தில் வேலைகள் செய்வதற்கென 25 ஆயிரம் தொழில்சார் சிப்பாய்கள் உள்ளனர். இதில் 10 ஆயிரம் பேர் இராணுவ உடை அணியாது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களை வழி நடத்துவதற்கு யுத்தத்தில் ஈடுபட்ட அனுபவமுள்ளவர்கள் மேற்பார்வையாளராக இருக்கின்றனர். ஆகவே, இராணுவத்தினர் மீது சுமத்தும் அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானவை” – என்றார். rum.com

Related Posts