மஹிந்தவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பிரிவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரில் 50 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக கடமையிலிருந்து நீங்கும்படி இராணுவத் தலைமையகம் அறிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இராணுவத்திற்குப் பதிலாக முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பு சபை எடுத்த முடிவின்படி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ மட்டுமன்றி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக பொலிஸாரை ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts