நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இடையூறாக விளங்கமாட்டார் என்றும் சபாநாயகர் அலுவலக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். சபாநாயகருடன் கலந்தாலோசிக்காது இவ்வாறு நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமை பலர் மத்தியிலும் விமர்சனங்களை தோற்றுவித்தது.
இதனை தொடர்ந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைமையின் மத்தியில் ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்களை பாதுகாக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சைக்கு ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும் என இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்ததுடன், பக்கசார்பின்றியும் நீதியான முறையிலும் தாம் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.