மஹிந்தவின் மகன் அனுப்பிய செய்மதியை காணவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி, காணாமல் போய்விட்டது என்று சுட்டிக்காட்டிய ஜே.வி.பி.யின் எம்.பி.யான நளிந்த ஜயதிஸ்ஸ, அந்த செய்மதியைக் கண்டுபிடிப்பதற்கு, இன்னுமொரு செய்மதியை அனுப்புங்கள் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் கேள்வி எழுப்பியபோதே நளிந்த எம்.பி மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார்.

பண்டங்களை ஏற்றி இறக்கும் நிறுவனமான சுப்ரீம் செட் தனியார் நிறுவனம், செய்மதியை அனுப்பும் தகுதியை எவ்வாறு பெற்றது? – என நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டிருந்தார். அக்கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, தெரியாது என்று எடுத்து எடுப்பிலேயே கூறிவிட்டார். இதனால் அவையிலிருந்தவர்கள் எல்லோரும் கெக்கென்று சிரித்துவிட்டனர்.

அப்படியானால், மஹிந்த ஆட்சியில் விண்ணுக்கு ஏவப்பட்டு காணாமல்போன அந்தச் செய்மதியைக் கண்டுபிடிக்க இன்னுமொரு செய்மதியை அரசாங்கம் அனுப்ப வேண்டும் என்றும் நளின் எம்.பி கோரிக்கைவிடுத்தார். அப்போதும் கெக்கென்று சிரித்துவிட்டனர்.

Related Posts