மஹிந்தவின் பாதுகாவலர் காணியில் அதிரடி சோதனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாவலராக கடமையாற்றிய மேஜர் நெவில் வண்ணியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் காணியில் பாதுகாப்பு தரப்பினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், தனது மனைவியின் தந்தையுடைய உடல் புதைக்கப்பட்டுள்ள வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் உள்ள கல்லறைக்கு அருகில் இவ்வாறு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

நேற்று காலை 10 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது பிரதேசவாசிகள் பலர் அவ்விடத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் பணம் போன்றவற்றை தேடுவதற்காகவே அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் 03 மணி வரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து எந்தப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை 4 மணி வரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகள், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட உத்தரவுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts