மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் நேற்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாகவும் இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என இன்று பலர் கூறுகின்றனர்.

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது.

அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டிய ஒரு தேவையிருந்தது. நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது. இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அலைவதில் தெரிகின்றது.இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்கவேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார்.

Related Posts