மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் மைத்திரிபால

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.

maithripala-sirisena

சிங்கள மக்கள் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள் இந்த மஹாநாயக்க தேரர்கள் என்று கருதப்படும் நிலையில், சிறிசேனவின் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தேரர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்திரிபால, தான் போட்டியிடவுள்ள கூட்டணியின் பெயர் சின்னம் போன்றவை அடுத்த ஓரிரு தினங்களில் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 72 மணி நேரங்களில் தனக்கு பலத்த மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுவது பற்றி மக்களுக்கு தகவல் அளிக்கும் துண்டு பிரசுரங்களை ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் கொழும்பில் விநியோகித்துள்ளனர்.

போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி நாட்டின் ஜனநாயகத்தை முடக்குவதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர்கள் கடந்த வாரம்தான் அரசாங்கப் பொறுப்புகளில் இருந்து விலகியிருந்தனர்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு தமது கட்சி ஆதரவு வழங்குவது பற்றிய தீர்மானம் செவ்வாயன்று வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Posts