நாட்டில் பல பேரழிவுகளை இவ்வளவுகாலமும் பதுக்கிவைத்திருந்த கடவுளை பாரிய நிதிமோசடிகளை விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுமுன் நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனது முகப்புப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடும் இவ்வாறே அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கெலிஓயா கரமட ஸ்ரீ வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத்தை நாட்டில் இல்லாதொழித்த இராணுவ வீரர்களை நினைவுகூர்வதை இல்லாதொழித்துவிட்டார்கள். கடந்த காலங்களில் யுத்த வெற்றிதினமாக மாத்திரமன்றி அனைத்து இன மக்களின் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது.
ஆனால், நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு யுத்த வெற்றிநாளைக் கொண்டாடாமல் விடுவது மடமைத் தனமாகும்.
நாட்டிலுள்ள பிரச்சனைகளையெல்லாம் எனது தலையில் கட்டிவிட்டு தப்பித்துக்கொள்ள முடியாது.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் முடக்கி விடப்பட்டுள்ளன. அரசாங்கம் தேவையறிந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.