மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி உதவி வழங்குமாறு முதலமைச்சர் பணிப்பு

வடமாகாணத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இடம்பெயர்ந்து மாற்று இடங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு வடமாகாண அமைச்சர்களுக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார்.

5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

மாகாணத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஊடாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. மேலும் பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கனமழை தொடருமானால் மேலும் பாதிப்புக்கள் அதிகரிக்கும் நிலையே இருக்கின்றது.தமிழ் மக்களுக்கு துன்பங்கள் ஒன்று சேர்ந்து வருவதே வழக்கம் இந்த வகையிலேயே தற்போதைய வெள்ள பாதிப்பும் இருந்து கொண்டிருக்கின்றது.

எனவே 5 மாவட்டங்களிலும் மாவட்டச் செயலர்களுடன் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உதவிகளையும் சுகாதார வசதிகளையும் செய்து கொடுக்குமாறு மாகாண அமைச்சர்கள் அனைவருக்கும் பணித்திருக்கிறேன்.

இந்த அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மாகாண சபை எடுக்கும் அதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

Related Posts