மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம்

அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson ​நேற்று (06) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

வடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொண்டிருக்கின்றது. விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தொழிநுட்பத்துடனான மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடமாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளது.

அதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆர்வம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளை தமது அரசாங்கம் வடமாகாணத்தில் திறம்பட செயற்படுத்தி வருவது தொடர்பில் தெரிவித்த அவர் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளபோதும் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு அதிகளவான உதவிகளை கிடைப்பதற்கு வடமாகாணசபை நிதி ஒதுக்கீடு செய்ய ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவிருப்பதாக ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

அபிவிருத்திக்கு தேவையான நிதியினை இலங்கை அரசுக்கு தமது அரசு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனும் கலந்துகொண்டார்.

Related Posts