மல்லாவி ம.க.யில் ஜீ.சீ.ஈ.உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் சிங்கள மாணவிகள்! முல்லை மாணவர்கள் அதிருப்தி!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர்.

மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும் மாங்குளம் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோரின் துணையுடனேயே மாணவிகள் பரீட்சையில் தோற்றியிருப்பதாக கோட்டக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு மாவட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் பரீட்சையில் தோற்றுவதாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகள் கல்வி கற்றமைக்கான சான்றுகள் இணைக்கப்படல் வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக குறித்த மாணவிகள் இருவரும் எங்கு கல்வி பயின்றனர் என்பதற்கான விபரம் எதுவும் தெரிவிக்கப்படாமலேயே அவர்கள் பரீட்சையில் தோற்றியிருக்கின்றமை தெரியவருகிறது.

மாங்குளம் மகாவித்தியாலயத்தில் சிங்களமொழி மூல வகுப்புக்களுக்கோ பரீட்சைக்கோ அனுமதியில்லாத நிலையில் 2012ஆம் ஆண்டும் குறித்த மாணவிகள் இருவரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

அவ்வாறு சிங்கள மொழிமூலமான அனுமதி வழங்கப்படுவதாக இருந்தால் குறித்த அனுமதி வலயக் கல்வித் திணைக்களத்தின் ஊடாகவே பெறப்படவேண்டும் என்பது நடைமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2012ஆம் ஆண்டு மாங்குளம் மகாவித்தியாலயத்தின் ஊடாக கபொத சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் இருவரே இவ்வாறு உயர்தரப் பரீட்சையிலும் தற்போது தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்றியுள்ளமை தொடர்பில் துணுக்காய் கல்வி வலய வட்டாரங்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளன.

தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் முதல் அமர்வில் பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத துணுக்காய் வலயக் கல்வி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நடைமுறையின் அடிப்படையில் தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் முதல் அமர்விலேயே தோற்றுவதாக இருந்தால், பாடசாலையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்படை, கணிப்பீடு மற்றும் ஏனைய பரீட்சைகள் தொடர்பிலான உறுதிப்படுத்தல் கடிதங்களை வலயக் கல்விப் பணிமனைக்கு சமர்ப்பித்து அதன் பின்னர் அங்கிருந்து மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்புதல் வேண்டும், மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கும் பட்சத்திலேயே மாணவர் தனிப்பட்ட ரீதியாக முதல் அமர்வில் பரீட்சையில் தோற்ற முடியும் என்பது நடைமுறை என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் பொறியியல் பீடத்திற்கு நால்வரும் மருத்துவ பீடத்துக்கு நால்வரும் மட்டுமே தெரிவாகிவரும் நிலையில் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் முதல் அமர்விலேயே சிங்கள மாணவிகள் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சையில் தோற்றுவது திட்டமிட்ட நடவடிக்கை என்று மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேற்குறித்த சம்பவம் தொடர்பில் வடக்குமாகாண கல்வி அமைச்சர் மற்றும் முல்லை மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts