முல்லைத்தீவு மல்லாவியில் வடக்கு விவசாய அமைச்சால் விவசாயிகளுக்கு சிறுபோகத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (23.04.2016) நடைபெற்றுள்ளது. மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான விதைகளை வழங்கிவைத்துள்ளார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து முல்லை மாவட்டத்தின் விவசாய மேம்பாட்டுக்கென 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 27.67 மில்லியன் ரூபா நேரடியாக 2400 விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்குவதற்குகென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில் இருந்தே முதற்கட்டமாக 222 விவசாயிகளுக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியில் விதைநெல், நிலக்கடலை, பயறு, உழுந்து போன்ற நடுகைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாணசபை உறுப்பினர்கள் வ.கமலேஸ்வரன், க.சிவநேசன் மற்றும் பதில் மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.