மல்லாகம் நீதிமன்றில் திறந்த மன்ற நடவடிக்கையின் போது விளக்கமறியல் சந்தேக நபருக்கு கஞ்சா போதைப்பொருளை கைமற்றிய மற்றொரு சந்தேக நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டறிந்தனர். அதனால் சந்தேக நபரை கடுமையாக எச்சரித்த மன்று, அவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அத்துடன், நீதிமன்ற வளாகத்துக்குள் வருபவர்கள் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்படும் நிலையில் கஞ்சா போதைப்பொருளை ஒருவர் எடுத்து வரும் நிலை எவ்வாறு ஏற்பட்டது என்று மாவட்ட நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, பொலிஸாரைக் கண்டித்தார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மோதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட வழக்கு அழைக்கப்பட்டது. அந்த வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் உள்ள நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் எதிரிக் கூண்டில் முற்படுத்தப்பட்டனர். அந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் சிலர் ஏற்கனவே பிணையில் வெளிவந்த நிலையில் முற்பட்டனர்.
தெல்லிப்பளை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பில் திறந்த மன்றில் விசாரணைகள் இடம்பெற்ற வேளை எதிரிக் கூண்டில் நின்ற சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியிலில் உள்ள சந்தேக நபருக்கு கஞ்சா சரை ஒன்றை கைமாறியுள்ளார். அதனை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டறிந்து அதனைக் கைப்பற்றினார்.
இந்த விடயம் மன்றிடம் முன்வைக்கப்பட்டது. கஞ்சா போதைப்பொருளை நீதிமன்றுக்கு எடுத்து வந்த சந்தேக நபரை கடுமையாக எச்சரித்த மன்று, அவர் மீது தனியான வழக்கைப் பதிவு செய்ய நீதிமன்றப் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
அத்துடன், நீதிமன்றுக்கு வருபவர்கள் பொலிஸாரால் வாயிலில் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படும் நிலையில் சந்தேக நபரால் எவ்வாறு கஞ்சா சரை உள்ளே எடுத்துவரப்பட்டது என்று விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்ட மன்று பொலிஸாரையும் கண்டித்தது.