மல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு!

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் நேற்று இரவு (திங்கட்கிழமை) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மல்லாகம், குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பாக்கியராசா சுதர்சன் என்ற இளைஞனின் சடலமே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னிலையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரங்களின் பின்னரே சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனை தொடர்பான அறிக்கை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் சகாயமாதா கோவில் திருவிழா நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட மோதலையடுத்து குறித்த பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts