மல்லாகம் துப்பாக்கிச் சூடு: நடந்தது என்ன?

மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் பெருநாள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவரால் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. ஆலயத்துக்கு வந்த இளைஞன், அவரை மீட்டு குழப்பத்தை தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் குழப்பத்தை தடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தார்.

இவ்வாறு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

“குழப்பநிலை இருந்தது உண்மை. இளைஞர் ஒருவர் கையில் கம்பியுடன் மாதா ஆலயப் பகுதிக்கு வந்தார். அவரை நான்கு இளைஞர்கள் தடுத்து, அப்புறப்படுத்த முற்பட்டனர்.

அந்தவேளை அவரது உறவினர் ஒருவர் (கொல்லப்பட்ட இளைஞன்) ஆலயத்துக்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கம்பியுடன் வந்த இளைஞனை காப்பாற்றி மோதலைத் தவிர்க்க முயன்றார்.

அப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. திடீரென வந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோதலைத் தவிர்க்க முயன்ற இளைஞனுக்கு துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்தது.

அவர் வீதியில் கிடந்து அவலக் குரல் எழுப்பினார். சிறிது நேரத்துக்குப் பின்னரே அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார்” என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சிலநாள்களாக மல்லாகம் பகுதியில் இரு தரப்பினரிடையே முரண்பாடு நீடித்து வந்தது என்றும் அப்பகுதியைச் சேர்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தை அடுத்து நான் துப்பாக்கி ரவைகள் வெடிக்காத நிலையில் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு வந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நீதிபதி பேசினார். விசாரணைகள் இடம்பெறும் போது, வீதித் தடைகளை ஏற்படுத்தி போராட்டங்களில் ஈடுபடவேண்டாம் என மக்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

வீதியில் கிடந்த கம்பிகள், தகரங்களை மீட்டு, அந்தப் பகுதியில் மோதல் இடம்பெற்றது என்று தெரிவித்து அவற்றை தடயப்பொருள்கள் என பொலிஸார் நீதிபதியிடம் காண்பித்தனர்.

இதேவேளை, சம்பவ இடத்தில் ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர்களைத் தடுத்த சிலர், கமராவை வேண்டி ஒளிப்படங்களை அழித்தனர்.

பொது மக்கள் இடையே கூடிநின்ற சிலர், குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்றனர். அவர்களை நீதிபதி எச்சரித்தார்.

குழப்பத்தை தடுக்க முயன்ற பொலிஸாரைத் தாக்கியதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது

“இரு குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுக்க பொலிஸார் முயன்றனர். அந்த கும்பல்களைச் சேர்ந்தோர் பொலிஸாரைத் தாக்கினர். அதனால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் இருவர் காயமடைந்தனர்”

இவ்வாறு மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Related Posts