மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 40 பேரை இலக்குவைத்து தேடுதல் வேட்டை!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதியில் பரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றபோது கலகத்தில் ஈடுபட்ட 40 பேரை இலக்குவைத்தே இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மல்லாகம் சகாயமாதா ஆலயத்தின் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றபோது, தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40 பேர் கொண்ட இரு குழுவினர் மோதிக்கொண்டனர். இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சுதர்ஷன் என்ற இளைஞன் உயிரிழந்தார்.

எனினும், குறித்த இளைஞன் மோதலில் ஈடுபடவில்லையென தெரிவிக்கும் மக்கள், இக்கொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், தம்மை தாக்குவதற்கு வாள்கள் சகிதம் முன்னோக்கி வந்ததாலேயே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற மல்லாகம் சகாயமாதா ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts