மல்லாகத்தில் நடைபெறவிருந்த மிருகபலி தடுத்து நிறுத்தப்பட்டது!

தீபத்திருநாளான நேற்று புதன்கிழமை மல்லாகம் நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த மிருக பலி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Kanavaththai-velvei-aadu

சைவ மகா சபையும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் பயனாக இந்த வேள்வி நிறுத்தப்பட்டுள்ளது.

உரிய அனுமதி பெறப்படாத காரணத்தால் இந்த வேள்வியை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆலயத்தில் பலியிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 25 இற்கு மேற்பட்ட ஆடுகள் திருப்பிக்கொண்டு செல்லப்பட்டன.

மேற்படி ஆலயத்தில் வருடாந்தம் தீபாவளி தினத்தன்று மிருக பலியிடுதல் நடைபெற்று வந்தது. ஆனால், இவ்வருடம் ஆலயத்தில் மிருக பலி நடத்துவதற்கு சனசமூக நிலையம் ஒன்று எதிர்ப்பை வெளியிட்டது. இது தொடர்பில் சனசமூக நிலையத்தால் வலி.வடக்கு பிரதேச சபை மற்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது.

இந்த நிலையில் ஆடுகள் வெட்டுவதாயின் சட்டரீதியான வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று தெரிவித்த தெல்லிப்பழை பொலிஸார் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் ஆடுகள் பரிசோதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படாமல் ஆடுகளை வெட்ட அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்தனர். மீறி ஆடுகளை வெட்டினால் வெட்டுபவர்கள் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸார் எச்சரித்தனர். இதனால் குறித்த ஆலயத்தில் நேற்று மிருக பலி இடம்பெறவில்லை.

Related Posts