மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், அவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.
மேற்படி குழுவினர், இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான நம்பிக்கையில் இருப்பவர்கள் என்றும்
மலேஷியாவின் பீனேக் மாநிலத்தில் இயங்கும் சீரோ தர்ட்டிசிக்ஸ் என்ற பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளார் என்றும், அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு துடைத்தெறியப்பட்டுள்ள போதிலும், அவ்வியக்கத்தினரின் நடவடிக்கைகள், மலேசியாவில் தொடர்வதாக, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்த கருத்துடன் தொடர்புபட்டதாகவே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று, புலனாய்வுப் பிரிவினர், சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.