“மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும்” ; மார்தட்டும் தமிழன்

கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என சவால் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் என்றாலும் வறுமையின் நிமிர்த்தம் தன் திறமையை உலகறிய செய்ய முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறு பிராயம் முதலே லசித் மலிங்கவின் பந்து வீச்சினை பார்த்து தான் பந்து வீசி பழகி வந்ததாகவும், தற்போது அவரின் வேகத்திற்கு தன்னால் பந்து வீச முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவரின் திறமையினை அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், விஜயராஜை தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மேலும் அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

கிரிக்கெட் வீரனின் பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் தான் தயாராக உள்ளதாகவும் மேலும் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் அவரிடத்தில் தெரிவித்துள்ளார்.

இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் ஒரு தமிழ் நட்சத்திர வீரராக உலக கிரிக்கெட்டினை அதிர வைப்பார் என்பதில் ஐயமில்லை.

 

http://www.e-jaffna.com/archives/85117

Related Posts