வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவியும் புதன்கிழமை இரவு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலய மாணவியாகிய இவர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதரத் தேர்வு எழுதவுள்ளார்.
அண்மைக்காலமாக வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் இராணுவ சுற்றி வளைப்புகள், தேடுதல்களின்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பெண்கள் அதிக அளவில் கைது செய்யப்படுவதைப் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற அமைப்பு கண்டனம் வெளியிட்ட அன்றைய தினம் இரவு வவுனியாவில் இந்தப் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதான மகள் விபூசிக்காவும் சில வாரங்களுக்கு முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு உதவி வருகின்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதுவரை 65 பேர் இப்படியான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், மிஞ்சியுள்ள 60 பேரில் 10 பேர் பெண்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் வியாழன்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த பெண்கள் அடிப்படை வசதிகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், கர்ப்பிணியான ஒரு பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தது என்றும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற அமைப்பு குற்றம் சுமத்தியிருந்ததையும், வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அந்த வசதிகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்திருக்கின்றார்.