மற்றவர்களை முன்னேற விடாத குணமே தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடை – முதலமைச்சர்

vikneswarnமற்றவர்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிட்டுத் தான் மட்டும் முன்னேற நினைக்கும் மக்களால் எமது தமிழ்ப் பேசும் சமூகம் முன்னேறாது. பதிலுக்கு எம் எல்லோருக்கும் அழிவைத் தேடித் தரவே அவ்வாறான நடவடிக்கை இடமளிக்கும் என நேற்றையதினம் சங்கரத்தை முருகமூர்த்தி ஆலய நாகலிங்கம்-இரத்தினசிங்கம் மணிமண்டப திறப்பபு விழாவில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

எம்மக்கள் எம்மைத் தமது பிரதிநிதிகளாக வடமாகாண சபைத் தேர்தலின் போது தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் எம்மைச் செயற்பட விடாமல் எல்லாவிதமான முட்டுக் கட்டைகளும் எம்முன் போடப்பட்டுள்ளதோடு வடமாகாண சபையை இயங்க விடாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பேர்ப்பட்ட சூழலில் நாம் ஒருவர்க்கொருவர் உதவி செய்வதில்த்தான் எமது வருங்கால வளர்ச்சி தங்கியுள்ளது. அரசாங்கம் எம் செயற்பாடுகளில் தடைகளையும் தாமதங்களையும் உட்புகுவித்தால் அதற்கு மாற்றீடாக நாம் எம்முள் ஒற்றுமையாய் இருந்து எமது காரியங்களைச் சாதிக்க முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு எமது வடமாகாணசபை மூலம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக விதவைகளுக்கு தையல் மெஷீன்களும்அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தண்ணீர் பம்புகளும், கோழி, மாடு போன்ற கால்நடைகளையும் வீட்டுத் தோட்டங்கள் அமைக்க வசதிகளையும் பெற்றுக் கொடுக்கலாம்.

அவர்கள் முறையாக அவற்றைப் பாவிக்கின்றார்களா பேணி வருகின்றார்களா பராமரிக்கின்றார்களா என்பதை எல்லாம் எமது அலுவலர்கள் பார்த்துக் கொள்வார்கள். எம்மை நாடி பலர் உதவி கேட்டு வருகின்றார்கள். வீடு கட்ட தகரங்கள் கேட்கின்றார்கள், பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் கேட்கின்றார்கள், மேற்படிப்புக்கு வசதியில்லை என்கின்றார்கள், சுயதொழில் ஆரம்பிக்கப் பணம் கேட்கின்றார்கள் மேலும் பல கோரிக்கைகளைக் கேட்கின்றார்கள். உதவி செய்ய உள்ளம் கொண்டவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் உரிய பாலத்தை நாம் அமைத்துக் கொடுப்போம்.

நாம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்கும் குணாதிசயமே இன்றைய இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களுக்கு அவசியமாய்த் தேவைப்படுகிறது. மற்றவர்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிட்டுத் தான் மட்டும் முன்னேற நினைக்கும் மக்களால் எமது தமிழ்ப் பேசும் சமூகம் முன்னேறாது. பதிலுக்கு எம் எல்லோருக்கும் அழிவைத் தேடித் தரவே அவ்வாறான நடவடிக்கை இடமளிக்கும்.

நாம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்கும் இந்தக் கொள்கை சகல வழிகளிலும் எமக்கு நன்மை பயக்கும். இதனை உணர்ந்து நாம் செயற்படுவோமாக என்று தெரிவித்தார்.

Related Posts