மர்ம வாகனத்தில் வந்தவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல் !

யாழ்.ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இலக்க தகடு அற்ற  ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டு உள்ளனர்.

ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஜீப்பில் வந்த நான்கு பேர் அவர்களை மறித்து அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி உள்ளனர். அத்துடன் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி சேதமாக்கியுள்ளனர். ஆணைக்கோட்டை சாக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கரராஜா சந்திரசேகரன் , காக்கை தீவு பகுதியை சேர்ந்த பாலசிங்கம் செல்வம் அதேயிடத்தை சேர்ந்த அமரசிங்கம் ஞானவேல் ஆகியோரே காயடைந்தவர்கள் .
இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில் ,
நான் எனது வீடு நோக்கி எனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை ஆலடி வைரவர் கோயிலுக்கு அருகில் ஜீப்பில் வந்தவர்கள் மூன்று இளைஞர்களை முழங்காலில் இருந்து விட்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களின் கைகளில் வாள் மற்றும் இரும்பு கம்பி காணப்பட்டது.  அவர்கள் என்னை கண்டதும் என்னை துரத்த முற்பட்டார்கள் நான் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு மிக வேகமாக ஓடி தப்பி விட்டேன்.
அவர்கள் என்னை துரத்திய வேளை முழங்காலில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுவிட்டு  அவர்களிடம் இருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து சென்ற பின்னர் நாம் அந்த இடத்திற்கு மீண்டும் சென்ற போது மூன்று மோட்டார் சைக்கிள்களும் நிலத்தில் தள்ளி விழுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர்.
அதேவேளை தாக்குதலாளிகள் அங்கிருந்து செல்லும் போது மோட்டார் சைக்கிள் திறப்புக்களையும் தம்முடன் எடுத்து சென்றுள்ளனர்.  தற்போது தாக்குதலுக்கு இலக்கான மூன்று இளைஞர்களும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதேவேளை
பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பல்கலைகழக மானவனான விஜயகுமார் சுலக்சன் வீட்டுக்கு அருகில் ஆலம்பிட்டி சந்தியில் நின்ற யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் மீதும் இலக்கதகடற்ற ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். அதனை அடுத்து சந்தியில் இருந்தவர்கள் சிதறி ஓடியுள்ளனர். பின்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

Related Posts