நாட்டில் 200 க்கும் அதிக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு தொடர்ந்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் நாடு மோசமான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அரசாங்கத்தினால் இவ்வருடத்தில் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 12.4 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஒரு காலாண்டுக்கு மாத்திரம் 20 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த அளவிலும் ஏனைய மருந்துகள் போதியளவிலும் கையிருப்பில் உள்ளன.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் 56 சதவீதமான சத்திரசிகிச்சை மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. அது மாத்திரமின்றி சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான இயந்திர வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலவுகிறது என்றார்.