நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றபோதிலும், தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமக்கேற்றாற்போல் விலைகளைத் தீர்மானித்து மருந்துகளை விற்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர்.
இதனடிப்படையில் புதிய தேசிய மருந்துக் கொள்கையை செயற்படுத்துவதன் மூலம் தரமான மருந்துகளை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியுமாக உள்ள போதும் அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு பின்வாங்குகின்றது.
இதைவிட, மக்கள் தரமான மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக தனியார் மருத்துவமனையையே நாடுகின்றனர். இதனால் குறிப்பிட்ட விலை நிர்ணயத்தைச் செய்யமுடியவில்லை.
அரச மருந்தகங்களில் உள்ள மருந்துகள் மற்றும் சிகிச்சைகளில் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அத்தோடு சந்தையில் விற்கப்படும் போலியான மருந்து மற்றும் மாபியா கும்பல்களை இணங்கான வேண்டும். இதன்மூலமே மருந்துகளின் விலையைக் குறைக்கமுடியும். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.