கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ வசதி இல்லாததால், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவமனையை அடைய, கிருஷ்ணா நதியை நீந்தி கடந்திருக்கிறார்.
எல்லாவா என்ற இந்த 22 வயதுப் பெண், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் வடக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள யாட்கிர் மாவட்ட்த்தில் அமைந்திருக்கும், நீலகந்தராயன்கடே என்ற தீவுக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர்.
இந்தப் பெண்ணுக்கு நீச்சல் தெரியாது ஊரில் மருத்துவ வசதி இல்லை. அருகில் மருத்துவமனை இருக்கும் இடம் ஆற்றுக்கு அப்பால் இருக்கிறது.
ஆறு சூழ்ந்த தீவாக இருக்கும் இந்த கிராமத்தில் இருந்து ஆற்றைக்கடந்து செல்ல ஒரு மர மிதவைதான் இருக்கிறது.
அது ஆறு பெருக்கெடுத்து சீற்றத்துடன் ஓடும் காலங்களில் இயங்குவதில்லை.
இந்த நிலையில்,வீட்டில் பிள்ளை பெறக்கூடாது, மருத்துவமனையிலேதான் தனது பிரசவம் நடக்க வேண்டும் என்ற உறுதியுடன், இவர் , காய்ந்த பூசணிக்காய்கள் மற்றும் சுரைக்காய்கள் போன்ற காய்களை மிதவைகளாக தனது உடலைச் சுற்றிக் கட்டிக்கொண்டு ,ஆற்றை கடக்க துணிந்திருக்கிறார்.
இவரது தந்தை, சகோதரர்,லக்ஷமணன் மற்றும் உறவினர்கள் சிலர் இவருடன் முன்னும் பின்னும் பாதுகாப்பாக ஆற்றில் நீந்தியிருக்கின்றனர்.
முன்னே அவரது சகோதர் நீந்திச் செல்ல, அவரது பிற உறவினர்கள் அவரது பின்னால் சென்றிருக்கின்றனர். உலர்ந்த பூசணிக்காயை ஒரு கயிற்றால் பிணைத்து, அந்தக் கயிறை சகோதரர் பிடித்துக்கொள்ள, காய்களை இவர் பற்றிக்கொண்டு நீந்தியிருக்கிறார்.
சுமார் அரை கிலோ மீட்டர் அகலம் உள்ள இந்த கிருஷ்ணா நதியில் இப்போது 12 அடியிலிருந்து 14 அடி வரை தண்ணீர் ஓடுகிறது. இந்த ஆற்றின் பாதி தூரத்தில் நீர்ச்சுழல் அதிகம் இருந்ததால் , அவர்கள் மேலும் ஆற்றின் கீழ்ப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, மொத்தமாகக் கடக்கவேண்டிய தொலைவு ஒரு கிலோமீட்டராகியது.
ஒரு வழியாக அக்கரையில் உள்ள கெக்கேரா என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு மருத்துவ மையத்தை அடைந்த இவர்களைப் பரிசோதித்த அரசு மருத்துவர் டாக்டர் வீணா இவர் நலமுடன் இருப்பதாகவும் ஆனால் களைத்திருப்பதால் ஒரு உறவினர் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருவதாகவும் கூறினார்.
அவருக்கு குழந்தை பிறக்க இன்னும் 20 அல்லது 25 நாட்களாகலாம் என்றும் அவர் கூறினார்.
இது வரை தனது அனுபவத்தில் இது போல ஒரு கர்ப்பிணிப் பெண் இவ்வாறு ஆற்றை நீந்திக் கடந்ததை தான் கண்டதில்லை என்று கூறிய வீணா எல்லாவாவின் துணிச்சலைப் பாராட்டினார்.