மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த கல்வித்தகைமை

மருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று அரசாங்கம் தீரமானித்துள்ளது.

இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வைத்திய பட்டப்படிப்பை தொடர்வதற்கு தேவையான ஆகக்குறைந்த தகுதி வைத்திய கட்டளை சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தும் நடைமுறை நீண்டகாலமாகவுள்ள தேவையாகும்.

வைத்திய பட்டப்படிப்பு தொடர இலங்கை பல்கலைகழகங்களில் சேர்த்து கொள்ளப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இந்நாட்டில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதிகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது 2 திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றுள்ளமை வைத்திய பீட கல்விக்கு மாணவர்களை சேர்த்து கொள்ள தேவையான ஆகக்குறைந்த தகைமையாக கருதவேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தினை வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Posts