வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதற்கான பிரேரணையை வடக்கு மாகாண சபையின் 16ஆவது அமர்வு இன்று புதன் கிழமை நடைபெற்றபோது விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோது, சமீபகாலமாக நாட்டில் நிலவிவருகின்ற கடுமையான வரட்சி மரநடுகையின் அவசியத்தை எமக்கு வலியுறுத்தி நிற்கிறது. மழையின் வருகைக்கு மரங்கள் அவசியம்.
இன்று உலகளாவிய ரீதியில் பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து காலநிலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ள, வளியில் அதிகரித்துச் செல்லும் கரியமில வாயுவை உறிஞ்சுவதற்கும் மரங்கள் அவசியம். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக எமது இயற்கைக் காடுகள் பல்வேறு காரணங்களால் மிகப் பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டன.
இலங்கைத் தீவில் பிரித்தானியர்கள் காலடி பதித்தபோது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 80 விழுக்காடு அளவில் செழித்திருந்த இயற்கைக் காடுகள் இன்று 23.87 விழுக்காடுகள் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டிருக்கிறது.
போராட்ட காலத்தில் பாதுகாக்கப்பட்ட வடக்கின் காடுகள்கூட இன்று தோல் இருக்கச் சுளை பிடுங்கும் கதையாகப் படைப்பலம்மிக்க அதிகார வர்க்கத்தால் கபளீகரம் செய்யப்படுகிறது. இலங்கையின் வரண்ட வலயமான வடக்கில் காடழிப்பின் காரணமாகவே வெம்மையின் கொடுமையை தற்போது நாம் கூடுதலாக அனுபவிக்க வேண்டியுள்ளது.
இதனால் இயற்கைச் சூழலின் சமநிலையைப் பேணுவதற்கும், இதனூடாக வடக்கில் எமது எதிர்கால சந்ததிகளின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும் மரநடுகையை ஒரு பேரியக்கமாகவே மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம்.
வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் முன்னெடுப்பதற்கு தன்பெயரிலேயே ‘கார்’ என்று மழையின் பெயரைக் கொண்ட கார்த்திகை மாதமே மிகப் பொருத்தமான மாதமாகும். இம்மாதப் பகுதியிலேயே வடக்கில் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது.
மேலும், தமிழர்கள் தம் வீடுகள் தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாளையும் இம்மாதம் தன்னகத்தே கொண்டுள்ளதால் தமிழர்களின் புனிதமான மாதமாகவும் கார்த்திகை கருதப்படுகிறது. இதன் பின்னணியிலும் மர வழிபாட்டைத் தமது தொல் வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு மரநடுகையை மேற்கொள்ள மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது.
இக் காரணங்களால், வடக்கின் மரநடுகை மாதமாகக் கார்த்திகை மாதத்தை, அதாவது நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியை அங்கீகரிக்குமாறு இச்சபையைக் கோருகின்றேன் – என்று தெரிவித்தார். இந்தத் தீர்மானத்தை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் ஆதரித்து உரையாற்றியதோடு வழிமொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.